காப்பீடு நிறுவன பொருட்களை 'ஜப்தி' செய்ய கோர்ட்டு உத்தரவு

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் காப்பீடு நிறுவனத்தின் பொருட்களை ‘ஜப்தி' செய்ய புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-04 16:43 GMT

புதுச்சேரி

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் காப்பீடு நிறுவனத்தின் பொருட்களை 'ஜப்தி' செய்ய புதுச்சேரி கோர்ட்டு உத்தரவிட் டுள்ளது.

இழப்பீடு தொகை

புதுச்சேரி பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் அங்காளன் (வயது 50), கடந்த 2007-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு வழங்கக்கோரி புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி இளவரசன் விசாரித்து, விஜயலட்சுமிக்கு இழப்பீடாக யுனைட்டெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ.22 லட்சத்து 59 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கவில்லை. இது தொடர்பாக விஜயலட்சுமி புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி விசாரித்து, காப்பீட்டு நிறுவன பொருட்களை 'ஜப்தி' செய்ய உத்தரவிட்டார்.

'ஜப்தி' செய்ய நடவடிக்கை

இதனை தொடர்ந்து கோர்ட்டு அமீனா வெங்கிட்டு, வக்கீல்கள் இன்று மதியம் புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள காப்பீடு நிறுவன கிளை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அமீனா அங்கு இருந்த பொருட்களை ஆய்வு செய்தார். அங்கு 20 கம்ப்யூட்டர், 20 நாற்காலிகள், 4 ஏ.சி.கள் இருப்பது தெரியவந்தது. அதனை 'ஜப்தி' செய்ய நடவடிக்கை எடுத்தார். ஆனால் கம்ப்யூட்டர் மற்றும் ஏ.சி.களை கழற்றுவதற்கான ஊழியர்கள் இல்லை. எனவே இது தொடர்பாக அமீனா கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த வழக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அன்று நீதிபதி அளிக்கும் உத்தரவின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பொருட்களை ஜப்தி செய்ய காப்பீட்டு நிறுவன அலுவலகத்துக்கு கோர்ட்டு ஊழியர் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்