குடிசை வீட்டில் தீ விபத்து
மணப்பட்டு பேட் கிராமத்தில் கூலித்தொழிலாளி வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.;
பாகூர்
பாகூர் தொகுதி மணப்பட்டு பேட், புதுதெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித் தொழிலாளி. இவர் குடிசை வீ்ட்டில் வசித்து வருகிறார். இன்று மாலை அவரது குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்த வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வீடு முழுவதும் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்குள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணி மணிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்று கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பாகூர் எம்.எல்.எ. செந்தில்குமார் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.