ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா

புதுவையில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதார துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.;

Update:2022-07-01 23:08 IST

புதுச்சேரி

புதுவையில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதார துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

பொதுமக்கள் அஜாக்கிரதை

புதுவையில் கடந்த ஆண்டு தொற்றின் வேகம் அதிகரித்து உயிர்ப்பலி ஏற்பட்டு வந்தது. ஒரேநாளில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பிறகு படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்தது.

ஒமைக்ரான் தொற்று பரவிய போதிலும் இதன் தாக்கம் அதிகம் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தடுப்பூசி போடுவதில் அரசு தீவிரம் காட்டியதால் கொரோனா பரவல் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியது.

கடந்த ஏப்ரல் 11-ந்தேதி தொற்று பரவல் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவெடுத்தது. அதன்பிறகு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் அரசு தீவிரம் காட்டாத நிலையில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அஜாக்கிரதையாக இருந்தனர்.

சுகாதார துறை அதிர்ச்சி

கடந்த மாதம் முதல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.

அதன்படி தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு வந்தனர். இதில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தொற்று நாள்தோறும் அதிகரித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் இன்றுகாலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 110 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதில் 82 பேர் புதுச்சேரியையும், 12 பேர் காரைக்காலையும், 16 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் சுகாதார துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஜிப்மர் மற்றும் ஆஸ்பத்திரிகளில் 13 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 389 பேர் வீடுகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்த பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தும்பட்சத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 300-ஐ தாண்டும் நிலை உள்ளது.

புதுச்சேரியில் 4 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ள நிலையில் 50 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் தொற்று பரவல் 6.22 சதவீதமாகவும், குணமடைவது 98.58 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 121 பேரும், 2-வது தவணையை 393 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 259 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 43 ஆயிரத்து 336 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த போதிலும் உயிரிழப்பு இல்லாதது ஆறுதலாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்