புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றம்
புதுவையில் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகையின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பாக உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி நகரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை பழைய துறைமுகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு 1000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த முடியும். கூடுதலாக 50 காவலர்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி
பழைய துறைமுகத்திற்கு செல்ல வழித்தெரியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக கியூ.ஆர்.கோடு வசதியுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கியூ.ஆர். ஸ்கேன் செய்தால் வாகன நிறுத்துமிடத்துக்கு வழிகாட்டும்.
மேலும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் கடற்கரை சாலை, புல்வார்டு பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் வாகனங்களை செயின்ட் லூயிஸ், துமாஸ் வீதி, பிரான்சுவா மார்ட்டின் வீதி, மணக்குள விநாயகர் வீதிகளில் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் சுய்ப்ரேன் வீதி, ரோமன் ரோலண்ட் வீதிகளில் ஒருபுறம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புஸ்சி வீதி
புஸ்சி வீதியில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் 4 சக்கர வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 5 மணிக்கு மேல் சோதனை முறையில் ஒருவழி பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி சாலை (மேற்கு), ஆம்பூர் சாலை (கிழக்கு) ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். இதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கவும் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.