நகரப்பகுதியில் 120 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.;

Update:2023-09-16 22:59 IST

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

21 அடி உயர விநாயகர்

இந்துக்களின் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்காக புதுவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இதையொட்டி புதுவை நகரப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை, இந்து முன்னணி சார்பில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதேபோல் கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

வழிகாட்டுதல்கள்

இதைத்தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அதனை கடலில் கொண்டு கரைப்பதற்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு, இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சிலைகள் ஊர்வலம்

அப்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பாக அவர்கள் உறுதியளித்தனர். மேலும் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அடுத்து வரும் காலங்களிலும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 5-வது நாள் சிலைகள் கரைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய சிலைகளின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விநாயகருக்கு படைப்பதற்காக பழங்கள், கரும்பு, பொரி என பல்வேறு பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்