கலெக்டர் அலுவலகத்தை சமூக அமைப்பினர் முற்றுகை

புதுவையில் கோவில் நிலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக அமைப்பினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-06-27 22:09 IST

புதுச்சேரி

கோவில் நிலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக அமைப்பினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில் நிலம் மோசடி

புதுவை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி பத்திரங்கள் தயாரித்து அபகரிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சார்பதிவாளர் சிவசாமி உள்பட 13 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

கோவில் நிலங்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்துள்ளதாக திராவிடர் விடுதலை கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு மாவட்ட பத்திர பதிவாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் புகார் கூறியுள்ளனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஜான்குமார் எம்.எல்.ஏ., மற்றும் நிலம் மோசடிக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் மற்றும் சமூக அமைப்பினர் கூடினார்கள். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

ஊர்வலத்துக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, மக்கள் வாழ்வுரிமை இயக்க பொதுச்செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் தலைவர் அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

62 பேர் கைது

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது 62 பேர் கைது செய்யப்பட்டு கோரிமேடு போலீஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்