குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 உதவித்தொகை

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.;

Update:2022-12-14 22:05 IST

காரைக்கால்

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெண்கள் மையம் திறப்பு

பாதிக்கப்பட்ட பெண் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான மையம் காரைக்கால் மாவட்ட குழந்தைகள் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர், பேசியதாவது:- முதல் அமைச்சர் ரங்கசாமியின் சிறப்பான நலத்திட்டங்களில் இதுவும் ஒன்று. பெண்கள் அனைத்து வகையிலும் சுதந்திரமாக உள்ளனர். குறிப்பாக, இந்த மையத்திற்கு தரமான டெண்டர் வைத்து, அதன் மூலம் சத்தான உணவுகள் அளிக்கப்படும்.

ரூ.1,000 உதவித்தொகை

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மிக சரியான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயனடையாதவர்கள், உடனே அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு வழங்கினார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

மைய நிர்வாகிகள் கூறுகையில்,''பெண்கள் தவறான முடிவை எடுக்காமல் இந்த மையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும். பெரும்பாலான மகளிர் வேலைக்கு செல்லும் இடத்திலும், சில பெண்கள் வரதட்சணை கொடுமைக்கும் ஆளாகிறார்கள். இந்த மையத்தை அணுகுவதன் மூலம் தீர்வு காணலாம். தேவையான பாதுகாப்பும், காவல்துறை உதவியும், சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும்'' என்றனர்.

விழாவில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, அரசு செயலர் உதயகுமார், காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, துணை மாவட்ட கலெக்டர் ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்