லாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி காற்றில் பறந்து சாலைகளில் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-17 16:02 GMT

திரு-பட்டினம்

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி காற்றில் பறந்து சாலைகளில் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தனியார் துறைமுகம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மேலவாஞ்சூர் கிராமத்தில், தனியார் துறைமுகம் கடந்த 2009 -ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அண்மையில், இந்த துறைமுகம் அதானி குழுமத்திற்கு கைமாறியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக எந்தவித பாதுகாப்பின்றி நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நிலக்கரி துகள்கள் பறப்பதால் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காய வைக்கமுடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டதாக கூறி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் துறைமுக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரிகளில் பாதுகாப்பின்றி...

இந்நிலையில் கடந்த சில வாரமாக, துறைமுகத்திலிருந்து அளவுக்கு அதிகமாக லாரிகளில் நிலக்கரி துகள்கள் ஏற்றி, பாதுகாப்பு இன்றி சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நிலக்கரி துகள்கள், காரைக்கால் மாவட்ட பிரதான சாலைகள் முழுவதும் சாலையின் ஓரத்தில் குவியலாக காட்சி தருகிறது. காற்று வீசும் நேரத்தில் இந்த துகள்கள் சாலையில் செல்வோர் மீது கண்ணில் விழுவதால் பலர் நிதானம் இழக்க நேரிடுகிறது.

மேலும் ஒரு சில வாகனங்கள் சாலையோரத்தில் செல்லும் போது, சறுக்கி விழும் அபாயமும் நிலவுகிறது. இது போன்ற கனரக லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, போலீசாரோ கண்டுகொள்வதில்லை. எனவே லாரிகளில் நிலக்கரி ஏற்றி செல்வோர் உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்