சிறையில் கைதிகள் மோதல்- பரபரப்பு
காரைக்கால் சிறையில் மோதிக்கொண்ட கைதிகளை தடுத்த 2 வார்டன்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்
காரைக்கால் சிறையில் மோதிக்கொண்ட கைதிகளை தடுத்த 2 வார்டன்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் கிளை சிறை உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு உணவுக்காக கைதிகள் வெளி வராண்டாவுக்கு வந்தனர்.
அப்போது கைதிகள் வின்சென்ட்ராஜ் (வயது 35), திலீப்குமார் (26) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இதுவே கைகலப்பாக மாறி, 2 பேரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். இதைப்பார்த்ததும் அங்கிருந்த சிறை தலைமை வார்டன் ஜெயராமன், வார்டன் ஆசிர்வாதம் ஆகியோர் அவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது வின்சென்ட்ராஜ், வார்டன்கள் 2 பேரையும் தாக்கி, கீழே தள்ளிவிட்டார். இதில் கைதிகள் 2 பேரும், வார்டன்கள் 2 பேரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலாப்பட்டுக்கு மாற்றம்
சிறையில் நடந்த மோதல் குறித்து காரைக்கால் நகர போலீசில் சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் புகார் செய்தார். அதன்பேரில் சிறை வார்டனை தாக்கிய வின்சென்ட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் ஆலோசனையின்படி வின்சென்ட்ராஜ் புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்கு மாற்றப்பட்டார்.
கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வார்டன்கள் தாக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.