முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவால் பா.ஜ.க. அதிர்ச்சி

கூட்டணியை விட்டு வெளியேறும் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் முடிவால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-10-20 16:48 GMT

புதுச்சேரி

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார். துறை ரீதியான பணிகளில் தொய்வு காணப்பட்டதால் நீக்கியதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் கொடுத்தார்.

ஆனால் இ்ந்த முடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. 10 நாட்களுக்கும் மேலாகியும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ரங்கசாமி எரிச்சல்

இதனிடையே முதல்-அமைச்சரால் பதவிநீக்கம் செய்து கடிதம் கொடுக்கப்பட்ட சந்திரபிரியங்கா தேசியக்கொடி கட்டப்பட்ட காரில் அரசு விழாக்களில் அமைச்சருக்குரிய அந்தஸ்துடன் வலம் வருவது முதல்-அமைச்சர் ரங்கசாமியை மேலும் எரிச்சலடைய வைத்துள்ளது.

ஏற்கனவே முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை திருப்பி அனுப்புவது, கேள்வி எழுப்புவது போன்ற செயல்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் தயவின்றி அவர்களால் இத்தகைய செயல்களில் ஈடுபட முடியாது என்பதை முதல்-அமைச்சர் ரங்கசாமி நன்கு அறிந்துள்ளார்.

ரங்கசாமி முடிவு

மேலும் சந்திரபிரியங்கா மீதான நடவடிக்கையில் மத்திய அரசு தனக்கு எதிராக செயல்படுவதாக அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேற ரங்கசாமி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 5 மாநில தேர்தலுக்குப்பின் அவர் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

பா.ஜ.க. அதிர்ச்சி

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த முடிவை அறிந்து பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட முடிவு செய்து பணிகளை தொடங்கியுள்ளனர்.

தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் அவ்வப்போது புதுவைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கிவைத்து வருகிறார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த அதிரடி முடிவு பா.ஜ.க.வினரை யோசிக்க வைத்துள்ளது. ஏற்கனவே தமிழகம், புதுவையில் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியுள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரசும் வெளியேறினால் தேர்தலை சந்திப்பது சிக்கலாகிவிடும் என்று பா.ஜ.க.வினர் கணக்கு போட்டு வருகின்றனர். எனவே புதுவை அரசியல் நிலவரம் குறித்து கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கவும் புதுவை பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்