முதல்-அமைச்சர் ரங்கசாமி திடீர் ஆய்வு

கடற்கரை சாலையில் உள்ள மாநாட்டு மையம் கவர்னர் மாளிகையாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-08-17 16:53 GMT

புதுச்சேரி

கடற்கரை சாலையில் உள்ள மாநாட்டு மையம் கவர்னர் மாளிகையாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மாநாட்டு மையம்

புதுவை கடற்கரை சாலையில் பழைய சாராய ஆலை இருந்த இடத்தில் தற்போது மாநாட்டு மையம் (கன்வென்சன் சென்டர்) கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் திறந்தவெளி கலையரங்கம், மாநாட்டு கூடம், தங்கும் அறைகள் என சகல வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளன.

இதனை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தனியாருக்கு கொடுக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக ஆலோசனைகளும் நடந்து வந்தன.

கவர்னர் மாளிகை

இந்த நிலையில் புதுவை கவர்னர் மாளிகை வலுவிழந்த நிலையில் இருப்பதால் அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக மாநாட்டு மைய கட்டிடத்தில் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்யலாமா? என்ற யோசனையும் அரசிடம் உள்ளது.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த புதிய கட்டிடத்துக்கு வந்து காரில் இருந்தபடியே பார்வையிட்டு சென்றார்.

பணிகளை முடிக்க...

இந்தநிலையில் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டு மையத்துக்கு வந்து பார்வையிட்டார். அப்போது அங்கு இன்னும் செய்யப்படாமல் உள்ள பணிகள் என்னென்ன? என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அந்த பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்