சந்திரபிரியங்காவின் கணவருக்கு அரசு வீட்டில் நுழைய அனுமதி மறுப்பு
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்காவை பிரிந்து வாழும் அவரது கணவருக்கு அரசு வீட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
புதுச்சேரி
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்காவை பிரிந்து வாழும் அவரது கணவருக்கு அரசு வீட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
பதவி நீக்கம்
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. இவருக்கும் அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சந்திரபிரியங்கா குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் துறை ரீதியான பணிளில் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து சந்திர பிரியங்காவை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதி செய்தார். இந்த விவகாரம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கம் குறித்து உறுதியான முடிவு எதுவும் எட்டப்படாத நிலை இருந்து வருகிறது.
அனுமதி மறுப்பு
அமைச்சராக சந்திரபிரியங்கா பதவி வகித்து வந்தபோது அவருக்கு அரசு சார்பில் புதுவை கடற்கரை அருகே உள்ள தூய்மா வீதியில் ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அமைச்சர் பதவியை துறந்த நிலையில் தற்போது அந்த வீட்டில் அவர் இல்லை. இந்தநிலையில் அந்த வீட்டிற்கு இன்று காலை சந்திர பிரியங்காவை பிரிந்து வாழும் அவரது சண்முகம் வந்துள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த போது வைத்திருந்த தனது உடமைகள் மற்றும் பொருட்களை அவர் எடுக்க வந்ததாக தெரிகிறது.
இதற்காக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும், பிற ஊழியர்களிடமும் வீட்டின் சாவியை சண்முகம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள், சாவியை அவரிடம் தர மறுத்து விட்டனர். சந்திரபிரியங்கா வீட்டில் இருக்கும்போது வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சண்முகம் வேறுவழியின்றி அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அரசு வீட்டுக்கு வந்த சந்திர பிரியங்காவின் கணவரால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.