காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்கள் வீச்சு

காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்களை வீசிய துணிகர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-10-25 18:11 GMT

புதுச்சேரி

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டணை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 300 பேர் உள்ளனர். இங்கு கைதிகள் செல்போன், போதைப்பொருட்களை உபயோகிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கோர்ட்டுக்கு வரும்போது அவர்களது கூட்டாளிகள் மூலம் இவை சப்ளை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சிறைத்துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வப்போது செல்போன் மற்றும் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மர்ம பார்சல்

இந்தநிலையில் சிறை வளாகத்தில் விசாரணை கைதிகள் பிரிவில் சிறைக்காவலர்கள் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2-வது, 3-வது பாதுகாப்பு சுவருக்கு இடைப்பட்ட பகுதியில் கழிவறை பகுதி அருகே கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான மர்ம பார்சல் ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள் அதை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் செல்போன், சிம்கார்டு, 55 பீடிகள், 9 ஹான்ஸ் பாக்கெட்டுகள இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காவலர்கள் உடந்தையா?

சிறை வளாகத்தில் 24 மணி நேரமும் சிறை காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது. அப்படியிருக்க அவர்களின் கண்காணிப்பையும் மீறி இந்த செயல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துணையுடனே இந்த துணிகர செயல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து காலாப்பட்டு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்