சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு வரவேற்பு

புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-05-20 17:49 GMT

புதுச்சேரி

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.

செயற்குழு கூட்டம்

பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் காலாப்பட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன், ரிச்சர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ரூ.1,250 கோடி ஒதுக்கீடு

*புதுவை மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடி சிறப்பு நிதியுதவியாக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிப்பது.

*வில்லியனூரில் ஆயுஷ் மருத்துவமனை மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுர்வேதாவில் பஞ்சகர்மா சிகிச்சைக்கும், சித்தாவில் வர்மம், தொக்கணம் சிகிச்சைக்கும், யோகா மூலம் அளிக்கப்படும் சிகிச்சைக்கும் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஒமியோபதி ஆகிய மருத்துவ பிரிவுகள் தொடங்கி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

குடிநீர் திட்டம்

* நமது பாரம்பரிய உணவு வகைகளை பயிரிட ஊக்கப்படுத்தி சிறுதானியங்களான திணை, கம்பு, கேழ்வரகு, மற்றும் சாமை போன்ற எண்ணற்ற வகை உணவு தானியங்களை பயிரிடுதல் மூலம் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஆரம்பித்து மண் ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் காத்து நோயற்ற வாழ்க்கையை உருவாக்க பாடுபட்டுவரும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

*புதுவை கோனேரிகுப்பம், உளவாய்க்கால், அகரம், திருக்காஞ்சி, திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு மற்றும் காரைக்கால் பகுதிகளில் நெடுங்காடு, டி.ஆர்.பட்டினம், முதலிமேடு போன்ற பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.28.27 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

*புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை ஆர்வம்காட்டி வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை செயற்குழுவை பாராட்டுவது.

*100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தை ரூ.240-லிருந்து ரூ.291 ஆக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்