தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம்

அரியாங்குப்பம் போக்குவரத்து சிக்னலில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-10-08 17:50 GMT

பாகூர்

அரியாங்குப்பம் போக்குவரத்து சிக்னலில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி மோதி கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

மத்திய மந்திரி வருகை

புதுச்சேரி அருகே சின்னவீராம்பட்டினம் கடற்கரைக்கு மத்திய மந்திரி புருஷோத்தன் ரூபலா மற்றும் புதுவையை சேர்ந்த அமைச்சர்கள் இன்று மாலை சென்றனர். பின்னர் அவர்கள் புதுவைக்கு காரில் திரும்பினர்.

இதற்காக அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கடலூர் - புதுச்சேரி சாலையில் வாகனங்களை போலீசார் சிறிது நேரம் நிறுத்தி வைத்திருந்தனர். மந்திய மந்திரி சென்ற பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அப்போது புதுச்சேரி மார்க்கமாக வந்த வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தன.

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

மாலை 6 மணியளவில் அரியாங்குப்பம் 4 முனை சந்திப்பில் வாகனங்கள் வந்தபோது திடீரென்று போக்குவரத்து சிக்னல் விழுந்தது. இதனால் வேகமாக வந்த வாகனங்கள் திடீர் பிரேக் பிடித்தன. இதில் அடுத்தடுத்து கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியும், கட்டுப்பாட்டை இழந்து கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் 3 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

12 பேர் காயம்

இந்த விபத்தில் கார், மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சே்ாந்த கணபதி (வயது 29), புதுவை களிஞ்சிக்குப்பம் முருகையன் (60), முருங்கப்பாக்கம் வசந்தா (58), அவரது மகள் தனஸ்ஸ்ரீ (25), அரியாங்குப்பம் ஜிஜேந்திர் (27), அவரது மனைவி ஷர்மி (25) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். காரில் இருந்த சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் சிக்கிய வாகனங்களால் அரியாங்குப்பம் 4 முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போக்குவரத்து போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்