அமைச்சரவை அலுவலகம் ரூ.82.31 லட்சம் பாக்கி

அமுதசுரபி நிறுவனத்திற்கு அமைச்சரவை அலுவலகம் ரூ.82 லட்சத்து 31 ஆயிரம் பாக்கி செலுத்த வேண்டும் என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2022-09-04 18:56 GMT

புதுச்சேரி

அமுதசுரபி நிறுவனத்திற்கு அமைச்சரவை அலுவலகம் ரூ.82 லட்சத்து 31 ஆயிரம் பாக்கி செலுத்த வேண்டும் என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, கவர்னர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அமுதசுரபி

புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி 1989-ம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. சந்தை விலையை விட குறைவான விலையில் மளிகை, ஜவுளி மற்றும் மின் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசு ஊழியர் களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளும் வகையில் கடனில் பொருட்கள் விற்பனை செய்து லாபத்தோடு சிறந்த முறையில் இயங்கியது.

ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீட்டால் அமுதசுரபி நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்து தனியார் கட்டிடங்களில் மாத வாடகைக்கு கடைகளை திறந்து செயல்படுத்தியது போன்ற காரணங்களால் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரூ.82.31 லட்சம் நிலுவை

அமைச்சரவை அலுவலகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பொருட்கள் வாங்கிய வகையில் அமுதசுரபிக்கு செலுத்த வேண்டியது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு அதன் மேலாண் இயக்குனர் தகவல் தரவில்லை. மேல்முறையீடு செய்த பின்பு அளித்த தகவலின் படி, அமுதசுரபிக்கு அமைச்சரவை அலுவலகம் ரூ.82 லட்சத்து 31 ஆயிரம் நிலுவை தொகை (பாக்கி) வைத்துள்ளது. எனவே அமைச்சரவை அலுவலகம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தி பொன்விழா கடந்த அமுதசுரபி நிறுவனத்தை மேம்படுத்தவும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்