ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் புதுமாப்பிள்ளை கைது

ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டை சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-06 16:01 GMT

வில்லியனூர்-

ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டை சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

அடித்துக் கொலை

வில்லியனூர் அருகே அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 45). ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

திடீர் திருப்பம்

விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் ஒருதலையாய் காதலித்த நிலையில் கோவிந்தம்மாளின் மகளை பெண் கேட்டுள்ளார். அதற்கு மறுத்ததால் இந்த கொலை நடந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் முதலில் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக புதுமாப்பிள்ளையான பஞ்சமூர்த்தி (33) என்பவர் கோவிந்தம்மாளை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சாபம் விட்டதால் ஆத்திரம்

பஞ்சமூர்த்தி திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். அவ்வப்போது திருப்பூரில் இருந்து வந்து மனைவியை பார்த்து விட்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில் முன்விரோதத்தால் பஞ்சமூர்த்தி, அவரது மனைவியை கோவிந்தம்மாள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, மனைவியின் கருவிலேயே குழந்தை கலைந்து விடும், வேலைக்கு போகும்போது விபத்தில் இறந்துவிடுவாய் என்று சாபம் விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பஞ்சமூர்த்தி கோவிந்தம்மாளை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்