குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

திருநள்ளாறில் தாயுடன் ஆடு மேய்க்க சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-06-18 16:24 GMT

திருநள்ளாறு

திருநள்ளாறில் தாயுடன் ஆடு மேய்க்க சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

9 வயது சிறுவன்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கை சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். அவரது மகன் முகமது சபியுல்லா (வயது 9). இவன் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை இவன் தனது தாயார் ரம்ஜான் பேகத்துடன் ஆடு மேய்க்க சென்றுள்ளான். வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் முகமது சலியுல்லாவை நிற்க வைத்துவிட்டு ஆடுகளை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது சிறுவன் குளத்தில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

பிணமாக மீட்பு

இதைத்தொடர்ந்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மகனை காணாது ரம்ஜான்பேகம் பதறி போனார். அவன் குளத்தில் தான் இறங்கியிருக்க கூடும் என்று சந்தேகித்த அவர், குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டனர். மேலும் சுரக்குடி தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு படையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்