என்.ஆர்.காங்கிரசை உடைக்க பா.ஜ.க. வேலை செய்கிறது - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
என்.ஆர்.காங்கிரசை உடைக்கும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.;
புதுச்சேரி,
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசியுள்ளார். சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்கள், மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு தொல்லை கொடுத்து, எதிர்க்கட்சி ஆட்சிகளை கலைப்பவர்கள் கூட்டாட்சி பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 87 சதவீதம் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடிதான் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்தது 4.50 லட்சம் கோடி. 2 ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்தாக முன்னாள் மத்திய மந்திரி ராசா, கனிமொழி எம்.பி.ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 5ஜி அலைக்கற்றை அதைவிட வேகமானது.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வருவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. தற்போது பீகாரிலும் அந்த வேலையில் இறங்கி உள்ளது. இன்னும் சில மாதங்களில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் இந்த நிலை வரும். அவரை வீட்டிற்கு அனுப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இப்போது என்.ஆர்.காங்கிரசை உடைக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.