பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
புதுவையில் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
புதிய கட்டிடங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை பெரியமார்க்கெட்டில் (குபேர் மார்க்கெட்) தற்போதுள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.36 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பெரிய மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களை ரோடியர் மில் திடல் அல்லது ரோடியர் மில் வளாகத்துக்குள் கடைகளை மாற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகளை முழுவதுமாக அகற்றாமல் பெரிய மார்க்கெட்டில் ஒரு பகுதியில் வேலையை தொடங்கவேண்டும். அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளை காலியாக உள்ள பழைய ஜெயில் வளாகத்துக்கு மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
கடையடைப்பு போராட்டம்
ஆனால் அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. 8 மாத காலத்துக்குள் இந்த பணியை முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் கடைகளை காலி செய்து கொடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதிகாலையில் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்பட்ட ஒருசில கடைகளும் கூட காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டன. மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து பெரிய மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்துக்கு வந்தனர். அங்கு வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*முத்தியால்பேட்டை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், குபேர் பஜார் கட்டிடங்கள் திட்டமிட்டபடி கட்டி முடிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பெரிய மார்க்கெட்டை காலி செய்தால் வியாபாரிகளும், கடை ஊழியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே அரசு வியாபாரிகளின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்.
தற்காலிக கடை
*பெரியமார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு கட்டுவதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்துவிட்டு அங்குள்ள வியாபாரிகளுக்கு இடமாற்றம் செய்து கொடுக்கவேண்டும். பழைய கடைகளை இடிக்காமல் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
*கழிப்பிடங்களை இடித்து நவீன கழிப்பிடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மார்க்கெட் உட்புற சாலைகளை சரிசெய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் வியாபாரிகள் பெரிய மார்க்கெட்டுக்கு வந்து கடைகளை திறந்தனர். பிற்பகல் முதல் வழக்கம்போல் கடைகள் இயங்கின.