சட்டசபையை முற்றுகையிட்ட 'பாசிக்' ஊழியர்கள் கைது
நிலுவை சம்பளம் கேட்டு சட்டசபையை முற்றுகையிட்ட ‘பாசிக்’ ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊர்வலமாக வந்து அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
நிலுவை சம்பளம் கேட்டு சட்டசபையை முற்றுகையிட்ட 'பாசிக்' ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊர்வலமாக வந்து அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலைநிறுத்தம்
புதுவை அரசு சார்பு நிறுவனமான 'பாசிக்' ஊழியர்களுக்கு 113 மாத சம்பள பாக்கி உள்ளது. இந்த சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுக்காக 'பாசிக்' ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 17-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் அவர்களுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.
ஊர்வலம்
இந்தநிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடப் போவதாக ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை பெரியார் பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே பாசிக் ஊழியர்கள் கூடினார்கள்.
அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேது.செல்வம், தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தள்ளுமுள்ளு
ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதனை தள்ளிக்கொண்டு அவர்கள் சட்டசபையை நோக்கி செல்ல முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருசிலர் அங்கிருந்த இரும்புத் தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனிடையே சிலர் மாற்றுப் பாதை வழியாக சென்று ஆம்பூர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அப்போது சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.