புதுச்சேரி
புதுச்சேரியில் பேனர் கலாசாரம் தலைதூக்கி உள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தோல்வி எதிரொலிக்கும்
ஒரே நாடு ஒரே தேர்தல் கோரிக்கை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் எழுந்தது. இப்போது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நாட்டில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை.
மாநில தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி சாத்தியப்படும். இப்போது பல மாநிலங்களில் தேர்தல் நடத்த இன்னும் 2½ ஆண்டுகள் உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும். அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் அதில் இந்த தோல்வி எதிரொலிக்கும் என்பதால் பா.ஜ.க. இந்த கோஷத்தை எழுப்புகிறது.
குறைந்தபட்ச செயல்திட்டம்
இந்தியா கூட்டணி என்ற பெயர் பிரதமர் மோடிக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் பாரத் என்று பெயர் மாற்றம் வேண்டும் என்கிறார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசி உள்ளார். நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு உள்ளது. தி.மு.க.வின் கொள்கையை அவர் பேசியுள்ளார்.
இதனை பா.ஜ.க. அரசியலாக்க பார்க்கிறது. இது எடுபடாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் தான். எங்கள் கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதன்படி தேர்தலை சந்திக்கும்.
பேனர் கலாசாரம்
டெல்லியில் ஜி-20 மாநாட்டுக்காக உலக தலைவர்கள் குவிந்துள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை. பா.ஜ.க.வுக்கு இதில் பரந்த மனப்பான்மை இல்லை.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின் பேனர் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையிலும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பிறந்தநாளுக்கு சாலைகளை அடைத்து பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்த பேனர்களால் ஏற்பட்ட விபத்தினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.
நடவடிக்கை
இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். பேனர் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காத கலெக்டர் மீது மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.