பாகூர் ஏரி கோரை புற்களில் தீப்பிடித்ததால் பரபரப்பு

பாகூர் ஏரியில் ஏற்பட்ட தீயால் பல ஏக்கர் பரப்பில் கோரை புற்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-03 17:33 GMT

பாகூர்

பாகூர் ஏரியில் ஏற்பட்ட தீயால் பல ஏக்கர் பரப்பில் கோரை புற்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பறவைகள் சரணாலயம்

புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி விளங்குகிறது. புதுச்சேரி - தமிழக பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியில் பருவ மழையின்போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வலசைக்கு வருவதால் பறவைகள் சரணாலயமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின்போது ஏரிமுழு கொள்ளளவை எட்டியது. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக ஏரி நீர்மட்டம் குறைந்து, குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் ஏரி பகுதியில் கோரை (விழல்) புற்கள் பல ஏக்கரில் வளர்ந்து இருந்த நிலையில் தற்போது கொளுத்தும் வெயிலால் காய்ந்துபோய் கிடக்கின்றன.

தீ வைப்பு

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர் யாரோ கோரை புற்களுக்கு தீ வைத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீ பரவி பல அடி உயரம் வளர்ந்திருந்த புற்கள், செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக மாறி பரபரப்பானது.

இதுபற்றி தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வரவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக ஏரியில் தீ எரிந்தது. இந்தநிலையில் இதுபற்றி தகவல் அறிந்து தமிழக வனத்துறை அதிகாரி திலகராஜ் தலைமையில் ஊழியர்கள் அங்கு வந்து தமிழக பகுதியில் பிடித்த தீயை அணைத்தனர்.

ஆனால் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட ஏரி பகுதியில் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களோ, வனத்துறையினரோ வரவில்லை. இதனால் ஏற்கனவே கடும் வெயிலால் காய்ந்திருந்த விழல்புற்கள், முட்புதர்கள், பெரிய, சிறிய மரங்கள் எரிந்து நாசமானது.

பறவைகள் வெளியேறின

இந்தநிலையில் இன்று பிற்பகல் புதுச்சேரி வனத்துறை அதிகாரி வஞ்சுளவல்லி மற்றும் வனத்துறையினர் நேற்று ஏரியை வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் இணைந்து தீயை அணைத்தனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று மதியம் வரை சுமார் 12 மணிநேரம் ஏற்பட்ட தீயில் 3 கிலோ மீட்டர் அளவில் புற்கள் மற்றும் மரம், செடிகள் எரிந்து நாசமாகி போயின. இந்த தீ விபத்தால் மரங்களில் கூடுகட்டி வசித்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வெளியேறி விட்டன.

Tags:    

மேலும் செய்திகள்