பாகூர் பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

புதுவையில் கிடப்பில் போடப்பட்ட பாகூர் பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. 7 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-08 15:55 GMT

பாகூர்

கிடப்பில் போடப்பட்ட பாகூர் பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. 7 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெற்களஞ்சியம்

புதுவை மாநிலத்தில் நெற்களஞ்சியமான பாகூர் பகுதி திகழ்கிறது. இங்கு தாலுகா அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து, மருத்துவமனை, பத்திரப்பதிவுத்துறை, கருவூலம், பொதுப்பணித்துறை, வேளாண்துறை துணை இயக்குனர் அலுவலகம், போலீஸ் நிலையம், நீர்ப்பாசனப் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது.

குறிப்பாக 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மூலநாதர் கோவில், பாகூர் ஏரி இருந்து வருகிறது. பொதுமக்களின் அன்றாட தேவைக்கும் அலுவல் பணிக்கும் பாகூருக்கு சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

பஸ்வசதி குறைவு

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊருக்கு பஸ்வசதி குறைவாகவே இருந்து வருகிறது. இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் கன்னியக் கோவில் இறங்கி அவ்வழியாக செல்வோரின் மோட்டார் சைக்கிள் உதவியின் மூலமாக செல்ல வேண்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பாகூர் பகுதிக்கு என பொது கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம், பஸ் நிலையம் அமைத்து தர அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவன் கோவில் அருகில் உள்ள மருத்துவமனையின் பின்புறத்தில் கழிப்பிட வசதி கொண்டு வந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் கொண்டு வர ஏற்பாடு நடந்தது. ஆனால் இதுவரை தொடங்கவில்லை.

பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைக்க 2004-ம் ஆண்டு பாகூர் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மண்கொட்டி சமன்படுத்தப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டில் சுற்றி மதில்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பிறகு அந்த திட்டம் கொண்டு வர முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

கைவிடப்பட்ட திட்டம்

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசு கொடுத்த காலத்திட்டத்திற்குள் புதுச்சேரி அரசு ரூர்பன் திட்டம் செயல்படுத்தாததால் திடீரென திட்டம் கைவிடப்பட்டது. இதனால் பாகூர் பகுதியில் பஸ் நிலையத்திற்கு தொடங்கப்பட்ட பணி மீண்டும் நின்றது. பஸ் நிலையம் கட்டப்படுமா? என்று பல கேள்விகள் இருந்த நிலையில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் புதுச்சேரி அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

முழு வீச்சில் பணிகள்

அதன்படி ரூர்பன் திட்டத்தில் மேலும் கால அவகாசம் பெறப்பட்டு அதற்கான பணி தொடங்கியுள்ளது. இந்த பஸ் நிலையத்தை சுமார் 7 மாதத்திற்குள் முடித்து விட மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்பேரில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது பஸ் நிலையம் பாகூர் பகுதிக்கென ஒரு நிலையம் உருவாக இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 4 பஸ்கள் நிற்பதற்கும், 10 கடைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என இந்த பஸ் நிலையத்தில் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்