விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை நடத்தினர். மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பாரதியார் வீதி, கோட்டுச்சேரி மற்றும் விநாயக மிஷின் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று காரைக்கால் கடற்கரை பகுதியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்்.