வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயற்சி : 5 பேர் கைது

திருக்கனூர் அருகே வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற 5 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-21 19:01 GMT

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், தமிழக பகுதியான கரசானூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் லிங்காரெட்டிபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முனியப்பன் என்ற தினேஷ் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அந்த இளம்பெண்ணை தன்னுடன் வந்து விடுமாறு முனியப்பன் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஆயுதங்களுடன் வீடு புகுந்து...

ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து தனது கணவருடன் தான் வாழ்வேன் என உறுதிபட கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன், ராகுல், அசோக், அய்யப்பன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு ஆயுதங்களுடன் நேற்று இரவு 7 மணி அளவில் லிங்கா ரெட்டிபாளையம் வந்தார்.

பின்னர் முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து அந்த இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் காட்டேரிக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

5 பேர் கைது

இதற்கிடையே அந்த இந்த கார் காட்டேரிக்குப்பம் வழியாக சென்றபோது போலீசாரும், பொதுமக்களுடன் இணைந்து காரை வழிமறித்தனர். அப்போது முனியப்பன் தப்பியோடி விட்டார். மேலும் காரில் இருந்து இளஞ்செழியன் உள்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுதங்களுடன் வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்