கலை, கலாசாரம், பண்பாடுகளை பகிர்ந்து கொள்ளலாம்

புதுவையில் மாநில தினம் கொண்டாடுவதன் மூலம் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-05-30 16:54 GMT

புதுச்சேரி

மாநில தினம் கொண்டாடுவதன் மூலம் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாநில தினம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கோவா மாநில உதய நாள் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தினங்களும் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி எடுத்த சிறப்பான முன்னெடுப்புக்கு நன்றி பாராட்ட வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலமாக வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து நமது கலை, கலாசாரம், பண்பாட்டுக் கூறுகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு மாநில விழாவின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. பிரதமர் மோடி இளைஞர்களிடம் சொல்வது "இந்தியா என்பது ஒன்று" என்று தான். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் பயனாக மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் மறைந்து போகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலைநிகழ்ச்சிகள்

நிகழ்ச்சியில் புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் செழியன், துணை பதிவாளர் டாக்டர் கணேசன், ஆரோவில் மையத்தைச் சேர்ந்த துருபத், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நந்திதா மற்றும் புதுவையில் தங்கி கல்லூரிகளில் படிக்கும் கோவா மாநில மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோவா மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்