துப்புரவு பணியாளர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Update: 2023-09-08 17:15 GMT

புதுச்சேரி

துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

குறைக்கேட்பு

புதுச்சேரிக்கு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் அரசு முறை பயணமாக 2 நாட்கள் வருகை தந்தார். அவர், புதுவை பல்கலைக்கழகம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் நேரில் சென்று அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் புதுவை அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் நகராட்சி, கொம்யூன் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் நேற்று காலை வெங்கடேசன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப்படுவதில்லை. சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

காப்பீடு

அதைத்தொடர்ந்து வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாநில அளவில் கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டியில் அடுத்த மாதத்திற்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர்களுக்கு கார்ப்பரேஷன் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது.

இதில் புதுவையை சேர்ந்தவர்கள் சிலர் கடன் பெற்று மீண்டும் செலுத்தாததால் அவர்களுக்கு கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்து மீண்டும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் துப்புரவு தொழிலாளர்கள் அல்லாதவர்கள் சிலர் கடன் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்புக்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை குரூப் காப்பீடு எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023 வரை செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 225 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டிக் டேங்க் துப்புரவு செய்தபோது உயிரிழந்த 2 பேருக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதுவையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க பரிந்துரைக்கப்படும். துப்புரவு பணியாளர்கள் தெரிவிக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்