மேற்கூரை இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-27 16:27 GMT

காரைக்கால்

காரைக்கால் நகர் பகுதியான மாரியம்மன் கோவில் வீதி, மெய்தீன் பள்ளி வீதி, மாமா தம்பி மரைக்காயர் வீதி, பிரெஞ்சு ஆசிரியர் வீதி, திருநகர், ஜுபைதா நகர், எஸ்.ஏ. நகர் ஆகிய பகுதிகளுக்கான அங்கன்வாடி மையம் திருநகரில் இயங்கி வருகிறது.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் செயல்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையத்தில், 2 பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், முறையான பராமரிப்பு இன்றி விடப்பட்டது. இதனால் சுவர்கள் சேதமடைந்து, மேற்கூரை ஓடுகள் உடைந்துபோய், எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது.

இதுபற்றி அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தை திறந்த ஊழியர்கள் உள்ளே சென்றபோது திடீரென்று மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குழந்தைகள் வந்து செல்லும் அங்கன்வாடியில் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கட்டிடத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சூர்யா மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்