மாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகை

தொழிற்பயிற்சி நிலையங்களில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

Update: 2023-06-19 15:45 GMT

திரு-பட்டினம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோட்டுச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:-

ஒரு அரசு சிறப்பாக செயல்படுவதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று சிறந்த கல்வி. மற்றொன்று சிறப்பான மருத்துவம் ஆகும். இவை புதுச்சேரி முதல்-அமைச்சரால் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ரூ.1,000

தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மதிய உணவு, இலவச சீருடை, நோட்டு, காலணிகள் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் ரூ.1,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. படிப்பு முடிந்தவுடன் அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

புதுச்சேரியில் 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 6 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. இதில் காரைக்காலில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் சிறப்பாக செயல்படுகிறது. அரசின் ஊக்கத்தொகையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை உதவி இயக்குனர் சரவணன், ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் முத்துக்குமார், பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், மாவட்ட போக்குவரத்து துறை ஆய்வாளர் கல்விமாறன், தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அதிகாரி சுகுணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்