விமர்சனங்களுக்கு இடையே புதுச்சேரி புதுமை படைக்கிறது

விமர்சனங்களுக்கு இடையே புதுச்சேரி புதுமை படைக்கிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-12-19 15:34 GMT

புதுச்சேரி

விமர்சனங்களுக்கு இடையே புதுச்சேரி புதுமை படைக்கிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாணவர் செயற்கைகோள்

டாக்டர் அப்துல்கலாம் இண்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் மாணவர்கள் தயாரிக்கும் 150 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த செயற்கைகோள்களை தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

புதுவையில் 50 மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் இண்டர்நேசனல் பவுண்டேசனின் நிர்வாக இயக்குனர் நசீமா மரைக்காயர் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குழந்தைகளின் ஆற்றல்

புதுவையில் விஞ்ஞான எழுச்சியை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும். இதனை அப்துல்கலாம் மண்ணில் இருந்து பார்க்க முடியவில்லை. அவர் விண்ணில் இருந்து இதை ஆசீர்வதிப்பார். இதைத்தான் அப்துல்கலாமும் கனவு கண்டார்.

கைகளில் பொம்மை வைத்து விளையாடிய மாணவர்கள் இப்போது செயற்கைகோள்களை வைத்து விளையாடுகிறார்கள். அப்துல்கலாம் விமானி ஆக கனவு கண்டார். 150 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி பிரமாண்ட முயற்சி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆற்றலோடு உள்ளோம். குழந்தைகளுக்கு நிறைய ஆற்றல் உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவது நமது கடமை. மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதுமை படைக்கும் புதுவை

நான் மாணவர்களுக்கு பரிசளிக்கும்போது முதலில் பங்கேற்றவர்களைத்தான் பாராட்டுவேன். அதற்கு பின்னரே வெற்றிபெற்றவர்களை பாராட்டுவேன். எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்பது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.

எல்லா வகையிலும் புதுச்சேரி முன்னேறி கொண்டு வருகிறது. பெஸ்ட் புதுச்சேரி ஆக மாறி வருகிறது. மற்றவர்கள் விமர்சனம் செய்தாலும் புதுவை புதுமை படைக்கிறது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மார்ட்டின் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், கல்பாக்கம் அணுசக்தி நிலைய இயக்குனர் வெங்கட்ராமன், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்