வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் போராட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-03 17:08 GMT

புதுச்சேரி

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி அரசு வேளாண்துறை பட்டதாரிகள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரதாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார், செயலாளர் வினோத் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 26 முதல் 32 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தகுதி வாய்ந்த வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண்துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். எந்த தாமதமும் இல்லாமல் அனைத்து தொழில்நுட்ப பதவிகளையும் சரியான நேரத்தில் முறைப்படுத்த வேண்டும். வேளாண் விரிவாக்க சேவையை வலுப்படுத்துவதற்காக காலியாக உள்ள வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர் போராட்டம்

அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிதல், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அலுவலகங்களில் நுழைவுவாயில் கூட்டமும், புதன்கிழமை பென் டவுன் வேலை நிறுத்தமும், 7-ந் தேதி ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் 8-ந் தேதி இயக்குனரகத்தில் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும், 11-ந் தேதி உண்ணாவிரதமும், 12-ந் தேதி முதல் இயக்குனரகத்தில் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்