11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2022-11-14 17:01 GMT

புதுச்சேரி

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மாணவர்களுக்கு பரிசு

புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

நாட்டின் பிரதமராக இருந்த நேரு ஐந்தாண்டு திட்டங்கள் தந்து வளர்ச்சிக்கு பாடுபட்டார். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்தார். எதிர்காலத்தில் இந்தியாவை சிறந்த நாடாக்குவது மாணவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது.

மத்திய அரசு இப்போது புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. சிறந்த கல்வியை பெற்று மாணவர்கள் சிறந்து விளங்குவதுதான் அரசின் எண்ணம். மாணவ பருவத்தில் நீங்கள் நன்றாக படிக்கவேண்டும். வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம். சிறந்த கல்வியை தருவது அரசின் கடமை.

கண்காணிப்பு குழு

அதை சரியாக செய்கிறோம். புதுவையின் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் உள்ளது. கல்வி வளர்ச்சியில் தனியார் பங்களிப்பும் அதிகமாக உள்ளது. பெற்றோர் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். புதுவை அரசுப் பள்ளிகளில் நல்ல ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது.

கல்வி கற்பித்தல், கற்றல் திறனை கண்காணிக்க ஒரு குழு அமைக்க உள்ளோம். இங்கு கல்வி கற்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. நினைத்த படிப்புகளை படிக்க முடிகிறது. சிறிய மாநிலத்தில் நிறைய மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இன்னும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.

வாய்ப்புகளை பயன்படுத்தி...

எந்த படிப்பினையும் செலவு, சிரமம் இல்லாமல் படிக்கலாம். நான் பல திருமணங்களுக்கு செல்லும்போது என்னை பார்ப்பவர்கள் உங்களால்தான் இப்போது எங்கள் பிள்ளைகள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உள்ளனர் என்று கூறுகிறார்கள். இங்குள்ள படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது அரசு வேலைக்காக செல்வதற்கு மட்டுமல்ல. சிந்தித்து செயல்படவும்தான். நல்ல சிந்தனையை தருவது கல்வி. நாம் அனைவரும் ஒரு குறிக்கோளுடன் படிக்கவேண்டும். கடின உழைப்பு இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். எந்த படிப்பு படித்தாலும் வெற்றிபெறலாம். வேளாண்மை படித்தவர்கள்கூட ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி உள்ளனர். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலவச மடிக்கணினி

இந்த வயதில் எளிதில் மனதை மாற்றும் விஷயங்கள் நடக்கும். அதை தவிர்த்து படிக்கவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு படியுங்கள். செல்போனில் அனைத்து விஷயங்களும் கிடைத்தாலும் நல்ல புத்தகங்களை படியுங்கள். அந்த பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நாங்கள் பொறுப்பேற்ற பின் மாணவர்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். விரைவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

செல்வகணபதி எம்.பி.

விழாவில் செல்வகணபதி எம்.பி., துணை இயக்குனர் பூபதி உள்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே, ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரசார் மடிக்கணினி திட்டத்தை கைவிட்டனர். தற்போது மீண்டும் ரங்கசாமி ஆட்சி கட்டிலுக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட மடிக்கணினி திட்டத்தை கொண்டு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்