போலீஸ் டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. புகார்
புதுவையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.;
புதுச்சேரி
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
அரியூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசும்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பற்றி தரைக்குறைவாக, அநாகரீகமாக விமர்சித்துள்ளார். மாண்புமிக்க பதவியில் இருக்கும் அவரைப்பற்றி தரம் தாழ்ந்து உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசிய ஆடியோ சி.டி.யும் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.