முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க நடவடிக்கை

ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரியில் முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Update: 2022-07-11 17:39 GMT

புதுச்சேரி

ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரியில் முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா

ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 23-வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்தது. கல்லூரியின் புலமுதல்வர் செழியன் வரவேற்று பேசினார்.

விழாவில் 52 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கினார். மேலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

ஆறுபோல வளப்படுத்தும்

இந்த கல்லூரியை பற்றி அரசு செயலாளர் குறிப்பிடும்போது 'ரிவர்' என்றார். ரிவர் என்றால் தமிழில் ஆறு என்று பொருள். ஆறு எங்கேயோ உருவாகி பல்வேறு இடங்கள் வழியாக சென்று வளப்படுத்தும். அதேபோல் இந்த கல்லூரி மாணவர்களும் இங்கு படித்து பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி பெருமை சேர்த்து வருகிறார்கள்.

இதுவரை 1,100 மாணவர்கள் படித்து முடித்து வெளியே சென்று பணியாற்றி வருகிறார்கள். இங்கு படித்தவர்களில் 93 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த கல்லூரி நான் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை தொடங்குவதற்கே சிரமமாக இருந்தது.

முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு

இந்த கல்லூரியில் 5 முதுநிலை பட்டப்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் (பிஎச்.டி.) தேவை என்றார்கள். அவற்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் தேவை என்றனர். அதற்கும் நிதி ஒதுக்கித்தரப்படும். தற்போது இங்கு 100 மாணவர்கள் படிக்கின்றனர். அதை 150 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். போதிய வகுப்பறைகள், தங்கும்வசதி ஏற்படுத்தி தரப்படும்.

நான் பட்டபடிப்பு முடித்ததும் சென்னை சென்று நாவலர் நெடுஞ்செழியன் கையால் பட்டம் பெற்றேன். பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கிடையே உங்களை படிக்க வைத்துள்ளனர். அவர்கள் முன்பு பட்டம் வாங்குவது மிகுந்த மகிழ்ச்சியை தரும். இந்த பட்டமானது ஒரு குடும்ப நிலையை உயர்த்தக்கூடியது. கால்நடை மருத்துவம் படித்தவர்கள் பலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும் வந்துள்ளனர். அதேபோல் நீங்களும் மாறவேண்டும். ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளையும் தரவேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

பங்கேற்றவர்கள்

பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலாளர் ரவிப்பிரகாஷ், தேசிய வேளாண் அறிவியல் கழக இயக்குனர் ராகவேந்திர பட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்