காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க நடவடிக்கை : முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுவையில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2023-10-18 17:29 GMT

புதுச்சேரி

புதுவையில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மனஅழுத்த மேலாண்மை

புதுச்சேரி போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க 'மனஅழுத்த மேலாண்மை' பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில்  இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

குற்றங்கள் குறைய வேண்டும்

காவல்துறை அதிகாரிகள் அணியும் காக்கி உடைக்கு ஒரு தனி மரியாதை எப்போதும் மக்களிடம் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு உணர்வுகளும், உறவுகளும் இருக்காது என்கிற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. பலர் இருக்கமான சூழலில் இருக்கிறார்கள். வேலை, குடும்பம் என இரண்டையும் பார்க்கும் போது பல நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. பண்டிகை நேரங்களில் கூட விடுமுறை கிடைக்காமல் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளைத் தாண்டி எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இதுபோன்ற வகுப்புகள் சொல்லிக் கொடுக்கிறது. போலீசார் முதலில் குடும்பத்திற்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நாட்டிற்கு பக்க பலமாக இருக்க முடியாது. நீங்கள் கொடூர குற்றவாளிகளையும் பார்க்க வேண்டி இருக்கும். பல்வேறு சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதுவையில் குற்றங்கள், போதை பழக்கம் குறைய வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல காவலர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரங்கசாமி

முகாமில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

ஒரு மனிதன் மன நலத்தோடு இருக்க வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். மனநலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். புதுவை காவல்துறையில் முன்பு காவலர்கள், அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது.

காவலர்கள் சில நேரங்களில் ஓய்வு இல்லாமல் வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. அப்படி இருக்கும் போது தானாகவே பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு பணிச்சுமை கூடும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் ஏற்படும் போது மனிதனுக்கு பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. நமக்கு வரும் பிரச்சினைகளை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை வந்தாலே போதும் மன அழுத்தம் சற்று குறையும்.

வார விடுமுறை

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக 500 ஊர்காவல் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.

புதுவையில் காவல்துறை முழு பலத்தோடு பணியாற்றும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே காவலர்கள் மகிழ்ச்சியோடு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 900 போலீசார் பயிற்சி பெற உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்