கல்வி நிறுவன வாகனங்கள் மீது நடவடிக்கை

புதுவையில் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-19 16:38 GMT

புதுச்சேரி

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி நிறுவன வாகனங்கள்

புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் 985-க்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வுக்கு உட்படுத்தி மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்காக போக்குவரத்துத்துறை அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 2 முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 600 வாகனங்கள் மட்டுமே மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி பெற்றுள்ளன. மேலும் பல வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட வில்லை. சில வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினசரி ஆய்வு

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதற்காகவும் போக்குவரத்து துறையானது மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் (போக்குவரத்து நகரம்) கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம்களை 2 முறை நடத்தியது.

சில கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை தங்களது வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வராததால் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை புதுவை மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) கல்வி நிறுவன வாகனங்களை தினசரி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாகனங்களை ஆய்வு செய்ய இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்