சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரி
திருபுவனையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருபுவனை
திருபுவனையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 வழிச்சாலை பணி
விழுப்புரம் - நாகை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் - புதுச்சேரி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்கள் ஒரு வழிப்பாதையாகவும் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து மக்காசோளம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூர்- திருபுவனை சாலை வழியாக திருவண்டார்கோவில்பகுதியில் உள்ள கோழித்தீவன தொழிற்சாலைக்கு வந்தது.
பள்ளத்தில் சிக்கியது
புதுச்சேரி - விழுப்புரம் 4 வழிச்சாலையில் திருபுவனை பாலம் அருகே சாலையில் திரும்பியபோது, லாரியின் பின்பக்க டயர் சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயற்சி எடுத்தும், அதிக பாரம் காரணமாக லாரியை அங்கிருந்து எடுக்க முடியவில்லை.
லாரி சிக்கியதால் மக்காசோள மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறின. இதனால் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை திருபுவனை- கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. காலை நேரம் என்பதால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மாற்றுப்பாதையில்...
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருவண்டார்கோவில் சிவன் கோவில் வழியாகவும், திருவண்டார்கோவில் சின்னபேட் வழியாகவும் போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
இதற்கிடையில் கோழி தீவன தொழிற்சாலை ஊழியர்கள் மற்றொரு லாரியுடன் அங்கு வந்தனர். அவர்கள் பள்ளத்தில் சிக்கிய லாரியில் இருந்த மூட்டைகளை மாற்று லாரியில் ஏற்றி, எடுத்துச்சென்றனர். இதன்பின் பள்ளத்தில் சிக்கிய லாரி கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அங்கிருந்து, எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணிநேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.