மணப்பட்டில் 100 ஏக்கரில் பல்நோக்கு சுற்றுலா மையம்

மணப்பட்டில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் பங்களிப்புடன் பல்நோக்கு சுற்றுலா மையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-07-04 17:37 GMT

புதுச்சேரி

மணப்பட்டில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் பங்களிப்புடன் பல்நோக்கு சுற்றுலா மையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தினார்.

பல்நோக்கு சுற்றுலா

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேசி தர்ஷன் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களின் திட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் பொதுப் பணித்துறையின் கலந்தாய்வு கூடத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பாகூர் மணப்பட்டில் 100 ஏக்கர் நிலத்தில் பல்நோக்கு சுற்றுலா மையத்தை தனியார் பங்களிப்புடன் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சுதேசி தர்ஷன் திட்டத்துக்கான ஒட்டுமொத்த திட்ட அறிக்கையை விரைவில் தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்

முன்னதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் ராஜ்பவன் தொகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை தனது அலுவலகத்தில் நடத்தினார். குறிப்பாக ரூ.150 கோடி மதிப்பில் 37 பணிகள் இங்கு நடைபெறுகிறது.

பெரிய வாய்க்கால், கடற்கரை, பாரதி பூங்கா பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி. மின் விளக்குகளை பராமரித்தல், கடற்கரை சாலையில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பராமரித்தல், நகரப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வாய்க்கால் பணிகள், குமரகுருபள்ளம், வாழைக்குளம், குருசுக்குப்பம் பகுதியில் உள்ள கழிப்பறைகளை பராமரித்தல், கலவைக்கல்லூரி, வ.உ.சி. பள்ளி கட்டிட பணிகளின் தற்போதைய நிலை, குமரகுருபள்ளத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், அந்த பணியில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்