புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
புதுச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மேற்பார்வையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் சிறப்பு அதிரப்படை போலீசார் நேற்று ஆம்பூர் சாலை, செஞ்சிசாலை, அரவிந்தர் வீதி, மிஷன்வீதி பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள 6 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களான மிஷன்வீதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 54), ரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்த ஜெய்சங்கர் (47), அரவிந்தர் வீதியை சேர்ந்த வேலு என்ற சக்திவேல் (55), செஞ்சி சாலையை சேர்ந்த சரவணன் (50), குமரவேல் (43), ஆம்பூர் சாலையை சேர்ந்த செல்வம் (42) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த கடைகளில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.