பொது இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகள் பிடித்து அகற்றம்
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.;
திருபுவனை
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
விளைநிலங்களில் அட்டகாசம்
திருபுவனை, திருபுவனை பாளையம், மதகடிப்பட்டுபாளையம், திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். சாலையின் குறுக்காக பன்றிகள் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வந்தனர்.
50 பன்றிகள் பிடிப்பு
இதுகுறித்து பொதுமக்கள் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆணையர் எழில்ராஜன் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன் பேரில் மதுரையை சேர்ந்த பன்றி பிடிக்கும் 12 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கிராமப்புறங்கள், விளைநிலங்களில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்று காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.