புதுவை ஊர்காவல் படையில் புதிதாக 415 வீரர்கள் தேர்வு
காவல்துறையில் 415 ஊர்காவல் படை வீரர்களை புதிதாக தேர்வு செய்ய புதுவை உள்துறை அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி
காவல்துறையில் 415 ஊர்காவல் படை வீரர்களை புதிதாக தேர்வு செய்ய புதுவை உள்துறை அனுமதி அளித்துள்ளது.
காலி பணியிடம்
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி காவல் துறையில் காவலர் பணியிடங்கள், யு.டி.சி., எல்.டி.சி.யில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை காவல் துறையில் ஊர்காவல் படையில் புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நடப்பாண்டில் (2023-24) ஊர்காவல் படையில் 415 பணியிடங்களை நிரப்ப உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அறிவிப்பு எப்போது?
அதன்படி ஊர்காவல் படையில் புதுச்சேரியில் 276 பேரில் ஆண்கள்-219, பெண்கள்-57, காரைக்காலில் 73 பேரில் ஆண்கள்-61, பெண்கள்-12, மாகியில் 46 பேரில் ஆண்கள்-37, பெண்கள்-9, ஏனாமில் 20 பேரில் ஆண்கள்-19, பெண்-1 என தேர்வு செய்ய உள்துறை அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஆணையை உள்துறை சார்பு செயலர் கிரண் பிறப்பித்துள்ளார். இதையடுத்து புதுவை காவல்துறை சார்பில் ஊர்காவல் படை வீரர்கள் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.