காலாப்பட்டில் 4 கிராம மீனவர்கள் உண்ணாவிரதம்
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டில் 4 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
காலாப்பட்டு
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டில் 4 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடல் அரிப்பு
புதுவை அருகே பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய 4 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் மீனவ மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று புதுவை அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரதம்
இதனை கண்டித்து 4 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் காலாப்பட்டில் உள்ள தியேட்டர் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், புதுவை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நான்கு கிராமங்களுக்கும் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும். இல்லையென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்போம். மேலும் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.