மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-27 16:57 GMT

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் திருபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார், நேற்று இரவு, நிரவி விழிதியூர் சோதனைச் சாவடியில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதில்அவர்கள், பெரும்புகழூர் தெற்குத்தெருவைச்சேர்ந்த காத்தையன் மகன் சுந்தர் (வயது26), சண்முகசுந்தரம் மகன் வெற்றிசெல்வன் (20) என்பதும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டவை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

மோட்டார் சைக்கிள் திருடர்கள்

அப்போது, காரைக்கால் நகர் பகுதியில், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிரவி பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களது வாக்குமூலத்தின்படி அவர்களது நண்பர்களான புளிக்கரை தென்புலியூரைச்சேர்ந்த இளங்கோவன் மகன் முத்து (21), கவுதம் மகன் கணேசன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை பிடித்த போலீசாரை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்