இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர்

புதுவையில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர். 11,322 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-08-27 17:09 GMT

புதுச்சேரி

புதுவையில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 35,582 பேர் எழுதினர். 11,322 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இளநிலை எழுத்தர் தேர்வு

புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.), 55 பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த தேர்வு எழுத பிளஸ்-2 அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்று புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இளநிலை எழுத்தர் தேர்வுக்காக புதுச்சேரியில் 46 ஆயிரத்து 904 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் 137 மையங்களில் இன்று நடந்தது.

தீவிர சோதனை

புதுச்சேரியில் 107, காரைக்காலில் 14, மாகியில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 மையங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு பணியில் 3 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வர்கள் காலை 8.30 மணி முதலே தேர்வு மையத்திற்கு வந்தனர். காலை 9.30 மணிக்கு பிறகு ஹால் டிக்கெட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு போன்றவற்றின் ஏதேனும் ஒரு அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பின் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கைப்பை, செல்போன், புளூடூத், ஹெட்போன்கள், கால்குலேட்டர், பென்டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 10 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

35,582 பேர் தேர்வு எழுதினர்

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முத்தியால்பேட்டை பாரதிதாசன் கல்லூரி, லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த தேர்வை மொத்தம் 35,582 பேர் எழுதினர். இது விண்ணப்பித்தவர்களில் 75.85 சதவீதம் ஆகும். 11,322 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வுக்கான விடை இன்று (திங்கட்கிழமை) புதுவை அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

கடினமான கேள்விகள்

இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு இன்று நடந்தது. குறைந்த இடங்களுக்கு அதிக போட்டிகள் இருப்பதால் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்