30 மரங்கள் வேரோடு சாய்ந்தன

புதுச்சேரியில் பெய்த கனமழையால் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன இதனால் நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.;

Update:2023-07-02 23:10 IST

புதுச்சேரி

புதுச்சேரியில் பெய்த கனமழையால் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன இதனால் நகரில் பெரும்பாலான இடங்களில் இன்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சூறைக்காற்றுடன் கனமழை

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுச்சேரியில் லேசானது முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் நள்ளிரவு வரை சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் புதுச்சேரியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

வேரோடு சாய்ந்த மரங்கள்

கனமழை மற்றும் சூறைக்காற்றால் புதுவை நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சட்டசபை வளாகத்தில் உள்ள மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சுற்றுச்சுவரில் இருந்த கம்பிகள் சேதமடைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு அம்சமாக திகழும் பாரதி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு விழுந்தன.

ஒயிட் டவுன் பகுதிகளான துப்புய் வீதி, பிரான்சுவா மார்த்தேன் வீதி, லல்லி தொலாந்தால் வீதி, விக்டர் சிமோனல் வீதி, அண்ணா சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பிரதான சாலைகள் மற்றும் வீதிகளில் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. நகரில் பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பல்வேறு இடங்களில் பேனர்கள், கட் அவுட் காற்றில் பறந்தன. நேற்று பெய்த மழை நள்ளிரவுக்கு மேல் நீடித்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று முதல் இன்று காலை வரை புதுவையில் 4.12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அமைச்சர் அவசர ஆலோசனை

இதற்கிடையே புதுவை சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. மழையால் சேதமடைந்ததை உடனடியாக சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். இதில் சூறைக்காற்றில் பல்வேறு இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்கள், முறிந்த மரக்கிளைகள், சேதமடைந்த விளம்பர தட்டிகள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து வனத்துறை, நகராட்சி அதிகாரிகள் பொதுப்பணித்துறையினருடன் இணைந்து வேரோடு சாய்ந்த மரங்கள், கிளைகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும் மின்சாரம் தடை ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் புதுவை சட்டசபை வளாகத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணி நடந்தபோது சபாநாயகர் செல்வம், மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தீயணைப்பு வீரர் காயம்

புதுவை நகரில் ஆங்காங்கே முறிந்த மரங்கள் மற்றும் கிளைகளை தீயணைப்புத்துறை, பொதுப்பணி, வனத்துறை, நகராட்சி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் துண்டு துண்டுகளாக வெட்டி அகற்றினார்கள். இந்த பணி இன்று மாலை வரை நீடித்தது. இதன் காரணமாக நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்றனர். சுற்றுலா பயணிகள் பலர் வழி தெரியாமல் சுற்றித்திரிந்தனர்.

எல்லைப்பிள்ளைச்சாவடியில் மீட்பு பணியில் ஈடுபட்ட கோரிமேடு தீயணைப்பு வீரர் குமார் காலில் மரம் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்