கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.;
புதுச்சேரி
முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தியால்பேட்டை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பாப்பம்மாள் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பொம்மையார்பாளையத்தை சேர்ந்த மதன் (வயது 26), முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்ற வினோத் (23), சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த அரிச்சந்திரன் (23) என்பதும் அவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 430 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.