3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
திருக்கனூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருக்கனூர்
திருக்கனூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் திருட்டு
திருக்கனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். இதுமட்டுமின்றி வெள்ளி பொருட்கள், மளிகை பொருட்கள், கியாஸ் சிலிண்டர்களையும் அள்ளி சென்றனர்.
குறிப்பாக செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் வீட்டிலும் கைவரிசை காட்டினர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி நெட்டப்பாக்கம் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (வயது 44), சீனிவாசன் (26), சிறுவந்தாடு தமிழ்ராஜ் (36) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள், திருக்கனூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு உள்ளிட்ட 4 வீடுகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் காவலில் விசாரணை
இதையடுத்து திருக்கனூர் போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் திருக்கனூர் பகுதியில் திருடிய நகைகளை விழுப்புரம், கோலியனூர் கூட்ரோடு பகுதிகளில் உள்ள அடகுகடைகளில் அடகு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அடகு வைத்த 5 பவுன் நகை மற்றும் 650 கிராம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3 நாட்கள் காவல் முடிந்து இன்று அவர்களை மீண்டும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.