புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2,328 கோடி வழங்கவேண்டும்

புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

Update: 2023-05-27 17:29 GMT

புதுச்சேரி

புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள் கலந்துகொண்டனர். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ரங்கசாமி

கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவையில் தொழில் தொடங்குவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். சிறு, குறு, நடுத்த தொழிற்சாலைகள் தொடங்க முதல் 3 ஆண்டுகளுக்கு அனுமதி பெற தேவையில்லை என்று அறிவித்துள்ளோம். தொழில் தொடங்குபவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை உள்ளது.

புதுவையில் நகர்ப்புற வளர்ச்சி வேகமாக உள்ளது. கட்டிடங்களுக்கு அனுமதி ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை பெருக்கிட தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க மத்திய அரசு உதவிடவேண்டும்.

மேம்பாலங்கள்

புதுவையில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க எங்களது அரசு மேம்பாலங்கள், ரிங்ரோடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் டிராம் வண்டிகள், டிரோன் டாக்சி போன்றவற்றை இயக்கவும் ஆய்வு செய்து வருகிறோம்.

கரசூரில் தொழிற்பேட்டையை மேம்படுத்தினால் ரூ.5 ஆயிரம் கோடி தனியார் முதலீடு கிடைக்கும். 5 வருடத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக பகுதியில் 395 ஏக்கர் நிலம் கிடைத்தால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதன் மூலம் ஆன்மிக, மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் பெருகும்.

புதுவைக்கு ஆண்டுதோறும் 19 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களில் 1.5 லட்சம் பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். சினிமா படப்பிடிப்பு, காட்டேஜ், படகு சவாரி, கலாசார சுற்றுலா என சுற்றுலாவை வளர்த்து வருகிறோம்.

வைப்புத்தொகை

எங்களது அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு (21-55 வயது) மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. மேலும் பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீத விலக்கும் அளிக்கிறோம்.

பெண்கள் பாதுகாப்புக்காக முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளோம். மேலும் பெண்களுக்காக பிங்க் பஸ்கள், ஆட்டோக்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். புதுவையின் கடைசி குடிமகனுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க போதிய சுகாதார ஊழியர்களை நியமித்துள்ளோம்.

வேலைவாய்ப்பு திறன்

மாவட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை வழங்குகிறோம். எங்கள் மாநிலத்தில் பிரசவத்தின்போது இறப்பு என்ற நிலை இல்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குகிறோம். அங்கு 3 மாதத்துக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படுகின்றன.

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருவோர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஆஸ்பத்திரி மற்றும் அதிநவீன வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க திறனை மேம்படுத்த உள்ளோம்.

ரூ.2,328 கோடி சிறப்பு நிதி

புதுவை நிர்வாகத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசு 16-வது நிதிக்குழுவை அமைக்க உள்ளது. இந்த நிதிக்குழுவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்க்கவேண்டும். புதுவையில் 5 முக்கிய திட்டஙக்ளை நிறைவேற்ற மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடியை வழங்கவேண்டும். ஏற்கனவே நாடாளுமன்ற நிலைக்குழு சட்டமன்றம் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநிலங்களைப்போல் நிதி வழங்க பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு 100 சதவீத நிதியையும் வழங்கவேண்டும். அப்படி செய்தால் புதுவையின் நிதிச்சுமை குறையும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்