சிறுவன் உள்பட 2 பேர் பலி

காரைக்காலில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2022-10-05 15:50 GMT

காரைக்கால்

காரைக்காலில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

சிறுவன் பலி

காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி தென்பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் கிஷோர் (வயது 12). இவன் நேற்று தனது உறவினர் மோட்டார் சைக்கிளை எடுத்துகொண்டு, மேலகாசாகுடி சாலையில் சென்றான். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சாலித்நாதன் (22) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் கிஷோர் மற்றும் நடந்து சென்ற சாலித்நாதன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக கிஷோர் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவன் பரிதாபமாக இறந்தான். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு தனியார் நூற்பாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (49). இவர் அங்குள்ள நூற்பாலை குடியிருப்பில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காரைக்காலுக்கு வந்த அவர், ரெயில்நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக காரைக்கால் ராஜாத்தி நகரை சேர்ந்த கஜனி (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்